Showing posts with label பயணக்கட்டுரை. Show all posts
Showing posts with label பயணக்கட்டுரை. Show all posts

Tuesday, August 12, 2014

நம்பெருமாளுடன் ஒரு நாள்

இட்லிவடை வலைத்தளத்திலும் பதிப்பிக்கப்பட்டது

 
ஸ்ரீரங்கம் சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டதை யோசித்து.... ஒரு நாள் பயணமாக ஸ்ரீரங்கம் செல்லலாம் என்று எடுத்த திடீர் முடிவின் காரணமாக, குடும்ப சகிதம் வெள்ளி (8.8.2014) அன்று காலையில், எப்போதும் போல லேட்டாகச் செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸில் ஸ்ரீரங்கம் போய்ச் சேர்ந்தேன். ஹோட்டல் அறையின் பால்கனியிலிருந்து ரம்யமான ராஜ கோபுர தரிசனமும், முரளி காபிக்கடையின் ஃபில்டர் காபியும் புத்துணர்ச்சி அளிப்பதாய் இருந்தன.





வைணவ பாரம்பரித்தில், கோயில் என்று பொதுவாகக் கூறினால், அது ஸ்ரீரங்கத்தையே குறிப்பிடுவதாகும். அழகிய மணவாளன், அரங்கன் என்றழைக்கப்படும் அரங்கமாநகருளானுக்கு “நம்பெருமாள்” என்ற பெயர் வந்ததற்கு ஒரு சுவையான காரணக்கதையை Jsri யின் வலைத்தளத்தில் (http://mykitchenpitch.wordpress.com) கண்டேன். அதன் சுருக்கம்:

ஸ்ரீரங்கத்தில் அயலாரின் படையெடுப்புக்கு (அப்போது தில்லி சுல்தான்) பயந்து,  திருமலைக்கு
ஒளித்து எடுத்துப்போன அரங்கன் விக்ரகத்தை 60 வருடங்கள் கழித்தே மீட்டு எடுத்து வந்தார்கள். அதுவரை வேறு ஒரு உத்சவமூர்த்தியை பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடந்துவந்தன. காணமல் போன அரங்கன் சிலை பற்றி அறிந்தவர்கள் யாருமே உயிருடன் அப்போது இல்லாமல் போனதால், திரும்பி வந்த விக்ரகஹத்தை அசல் என்று பலரும் ஏற்க மறுத்தனர். ஆனால், எப்போதோ காணாமல் போன ரங்கநாயகித் தாயாரின் விக்ரஹம், 60 வருடங்கள் கழித்து திருமலையிலிருந்து அரங்கன் விக்ரகம் திரும்பி வந்த அதே சமயத்தில், கிடைத்து விட, ஸ்ரீரங்கம் திரும்பிய உத்சவர் தான் அசல் அரங்கனோ என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டு விடுகிறது!

அரங்கன் விக்ரஹம் திருமலை செல்வதற்கு முன், அரங்கனின் ஆடைகளை சலவை செய்து வந்த, பின்னர் கண்பார்வை இழந்த 93 வயது வண்ணான் ஒருவர் இன்னும் உயிருடன் இருப்பது தெரியவருகிறது. அவரை அழைத்து விசாரித்ததில், அவர் கூறிய விக்ரஹ அடையாளங்கள் ஒத்துப் போனது. மேலும் அவர் தன்னால் அபிஷேக (திருமஞ்சன) தீர்த்தத்தை ருசித்து இனம் காணமுடியும் என்று சொல்ல, பழைய/புதிய உத்சவமூர்த்திகளின் அபிஷேக தீர்த்தமும் (ஈரவாடை என்று கூறுவர்) அவருக்கு அளிக்கப்படுகிறது. திருமலையிலிருந்து மீண்டு வந்த அரங்கனின் தீர்த்தத்தை அருந்திய அச்சலவைத்தொழிலாளி, ‘ இவரே நம் பெருமாள், இவரே நம் பெருமாள்! ’ என மகிழ்ச்சியில் கூவ, ‘நம்பெருமாள்’ என்ற பெயர் அரங்கனுக்கு நிலைத்தது. ஈரத்தமிழில் திருவாய்மொழி அருளிய காரிமாறப்பிரானை வாஞ்சையோடு “நம் ஆழ்வார்” என்று நாம் அழைப்பதில்லையா!

ஸ்ரீரங்கம் கோயில் 7 பிரகாரங்கள் கொண்ட பிரம்மாண்டமான கோயில். 108 வைணவ திருப்பதிகளில் முதன்மையானது. 10 ஆழ்வார்களால் (except மதுரகவி & தொண்டரடிப்பொடியாழ்வார்) பாடல் பெற்றது திருவேங்கடம் எனப்படும் திருமலையும், திருப்பாற்கடலும். ஆனால், 11 ஆழ்வார்களால் (except மதுரகவியாழ்வார் – இவர் தன் ஆச்சார்யன் நம்மாழ்வார் பற்றி மட்டுமே பாடியுள்ளார் -கண்ணிநுண் சிறுத்தாம்பு) பாடல் பெற்ற ஒரே திவ்யதேசம் திருவரங்கம் மட்டுமே! 247 பிரபந்தப் பாசுரங்களில் ஸ்ரீரங்கம் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

ஆராத அருளமுதம் பொதிந்த கோயில்
அம்புயத்தோன் அயோத்தி மன்னற் களித்த கோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்குத் துணையாங் கோயில்
சேராத பயனல்லாஞ் சேர்க்குங் கோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்த கோயில்
தீராத வினையனைத்தும் தீர்க்கும்கோயில்
திருவரங்க மெனத் திகழுங்கோயில் தானே!

என்று தன்னுடைய அதிகார ஸங்க்ரஹம் என்ற நூலில் ஸ்ரீரங்கத்தைப் பற்றி (பாகவத சிம்மம் என்று போற்றப்பட்ட) சுவாமி வேதாந்த தேசிகன் குறிப்பிடுகிறார்.

நம்மாழ்வார் திருவாய்மொழியில் அருளிய ”கங்குலும் பகலும் கண் துயிலறியாள்” பதிகமும், திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிப்பிரான் (10) பாசுரங்களும், தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருமாலைப்பாசுரங்களும் எனக்குப் பிடித்தவை. தொண்டரடிப்பொடியின் இப்பாசுரம் கல்லையும் கரைக்க வல்லது!

ஊரிலே காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரமமூர்த்தி
காரொளி வண்ணனே (என்) கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா, அரங்கமாநகருளானே!

பெரியாழ்வாரின் பாசுர முத்து ஒன்று:

கன்னி நன் மாமதிள் சூழ்தரு* பூம்பொழில் காவிரித் தென்னரங்கம்*
மன்னியசீர் மதுசூதனா! கேசவா!* பாவியேன்வாழ்வுகந்து*
உன்னை இளங்கன்று மேய்க்கச்* சிறுகாலேயூட்டி ஒருப்படுத்தேன்*
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை* என் குட்டனே முத்தம் தா.

நாச்சியார் திருமொழியிலிருந்து:: 


தாம் உகக்கும் தம் கையிற் சங்கமே போலாவோ
யாம் உகக்கும் எம் கையில் சங்கமும்? ஏந்திழையீர்
தீ முகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்
ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே 



அரங்கன் தன் முகத்தை ஏறிட்டும் பார்க்காமல் சேஷசயனத்தில் இருப்பதைக் கண்டு நாச்சியார் ’புலம்புவதாக’ கீழுள்ள ஆண்டாள் பாசுரம் அமைந்துள்ளது :-) இங்கு சங்கம் என்பதற்கு அரங்கனின் கைச்சங்கு என்றும், கைவளையல் என்றும் இரு பொருள்கள் உண்டு. “அம்மனே” வுக்கு ”அந்தோ” என்று பொருள் கொள்ளவேண்டும்

அடுத்து சேரமன்னனாக விளங்கிய குலசேகர ஆழ்வாரின், பேரன்பும், பெரும்பக்தியும் இப்பாசுரங்களில் எவ்வளவு அழகாக வெளிப்படுகிறது, பாருங்கள்:

ஆதி அந்தம் அனந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மாமலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திடத்
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப்பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே

கோல் ஆர்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம்
கொலையாழி கொடுந்தண்டு கொற்ற ஒள் வாள்
கால் ஆர்ந்த கதிக் கருடன் என்னும் வென்றிக்
கடும்பறவை இவை அனைத்தும் புறஞ்சூழ் காப்ப
சேல் ஆர்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த
திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
மாலோனைக் கண்டு இன்பக் கலவி எய்தி
வல்வினையேன் என்றுகொலோ வாழும் நாளே

கோயில் உள்/வெளிப் பிரகாரங்களில் பல சன்னதிகள் உள்ளன. செங்கமலவல்லித்தாயார், சக்கரத்தாழ்வார், பட்டாபிராமன், நுணுக்கமாக செதுக்கப்பட்ட. பிரம்மாண்டமான கருடாழ்வார், வாசுதேவன், மீசை வைத்த பார்த்தசாரதி, சுவாமி தேசிகர், தன்வந்திரி, ரங்கநாயகித் தாயாருக்குத் தனியாக என்று இப்படிப் பல. கோயில் விமானத்தில் மிக அழகான பரவாசுதேவர் கோலத்தை படத்தில் காணலாம்.



இங்குள்ள ராமானுஜரின் தனிச்சன்னதியில் அவரது “தான் ஆன” திருமேனியை தரிசிக்கலாம். அமர்ந்த நிலையில் உள்ள ராமானுஜரின் சிலைக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) கிடையாது. ஆண்டுக்கு 2 தடவை (ஐப்பசி,சித்திரை), பச்சைக்கற்பூரமும், குங்குமப்பூவும் கலந்து திருமேனியில் சாற்றுவது வழக்கம். அவரது ”தமர் உகந்த” திருமேனியை மேல்கோட்டை என்ற திருநாராயணபுரத்திலும் ”தானுகந்த” திருமேனியை ஸ்ரீபெரும்புதூரிலும் தரிசிக்கலாம். பெருமாளின் துயிலணையாக விளங்கும் ஆதிசேஷனின் அவதாரங்களாக லட்சுமணன், பலராமன், ராமானுஜர் ஆகியோரைக் குறிப்பிடுவர்.



மேலும் தகவல்களுக்கு:

எந்தை இராமானுச முனியை (எம்பெருமானார், யதிராசர், பாஷ்யகாரர், உடையவர், இளையாழ்வார் என்ற பிற திருநாமங்களும் இவர்க்கு உண்டு) வைணவம் தழைக்க வந்த ஒரு புரட்சித்துறவி என்று தாராளமாக அழைக்கலாம். 1000 ஆண்டுகளுக்கு முன்னமே, சாதி பேதம் பாராமல், வைணவக் கொள்கைகளை கைக்கொண்ட அனைவரும், திராவிட வேதம் எனும் பிரபந்தப் பாசுரங்களை ஓதவும், வைணவ மதச்சின்னங்களை அணியவும், சமாஸ்ரயணம் என்ற சடங்கு வாயிலாக சங்கு சக்கர முத்திரைகளை பதிந்து வைணவத்தைப் பற்றவும், இராமானுசர் வழி ஏற்படுத்தினார். பெருமாள் (திருமால்) மேல் அன்பும், பற்றும், பக்தியும் கொண்டு, அவன் தாள் பற்றி பூரண சரணாகதி மேற்கொள்ளும் அடியவர் அனைவரும் வைணவரே என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டவர் அண்ணல் இராமானுசர்.


”ரங்கா ரங்கா” கோபுரத்தின் இடது புறம் ஒரு 300 மீ தொலைவில், தெற்கு உத்தரவீதியில் மளவாள மாமுனிகளுக்கு தனிச்சன்னதி ஒன்று அமைந்துள்ளது. திருவாய்மொழிப்பிள்ளையின் சீடரான இவ்வைணவ ஆச்சார்யரன் உபதேச ரத்தினமாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, ஆர்த்தி பிரபந்தம் ஆகிய கிரந்தங்களை அருளியதுடன் ஆழ்வார்களின் அருளிச்செயல்களுக்கு உரையும் எழுதியுள்ளார்.

கூட்டம் குறைவாக இருப்பின், திருவரங்கம் கோயிலை முழுமையாக சுற்றிப்பார்க்க, தரிசிக்க குறைந்தபட்சம் 6 மணி நேரம் ஆகும். நான் சொன்னதற்கு மேல், திருவரங்கம் குறித்த செய்திகள் ஏராளமாக இணையத்தில் கிடைக்கின்றன. ஸ்ரீரங்கத்திற்கு அருகில் இருக்கும் இன்னும் சில கோவில்களுக்கு (கோயிலடி, திருஅன்பில், உத்தமர் கோயில், திருவெள்ளறை, குணசீலம்) சென்று வந்தது பற்றி பிறிதொரு சமயம் எழுதுகிறேன்.

Tuesday, May 01, 2012

திருமெய்யத்தில் பகவத் ராமானுஜரின் திருநட்சத்திர உத்சவம்


என் தாய் வழி பாட்டனார் புதுக்கோட்டை மற்றும் காரைக்குடிக்கு நடுவில் அமைந்திருக்கும் திருமெய்யம் என்ற ஊரைச் சேர்ந்தவர். அந்த வைணவ திவ்யதேசம் பற்றி எனக்கு நிறைய சொல்லியிருக்கிறார். அவர் காலமாகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பின் தான், அக்கோயிலுக்கு சென்று பெருமாளை முதல் முறை தரிசித்தேன். அதன் பின்னர், ஒரு 3-4 முறை சென்றிருப்பேன்.

மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட 8-ஆம் நூற்றாண்டு கோயிலிது. மலைக்கு மேல் கோட்டை உள்ளது. சில இடங்களில் சிதிலமடைந்த நிலையில் கோயிலை சுற்றி மதில் சுவரை காணலாம்.

அன்ன வுருவில் அரியை, திருமெய்யத்து இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை, மன்னும் மதிட்கச்சி வேளுக்கை யாளரியை, மன்னிய பாடகத்தெம் மைந்தனை --- இது பெரிய திருமடல் பிரபந்தத்தில் கலியன் எனும் திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனம்!

திருமெய்யம் பற்றி சுஜாதா தேசிகன் அவர்களின் அருமையான இடுகை இங்கே!



திருமெய்யராக கிடந்த கோலத்திலும் சத்யகிரி நாதராக நின்ற கோலத்திலும் பெருமாள் அருள் பாலிக்கும் திவ்ய தேசமான திருமெய்யத்தில், சுமார் 50 ஆண்டுகளாக (7 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்ரோக்ஷணத்தின் போது கோயிலின் எல்லா உத்சவ மூர்த்திகளுக்குமான திருமஞ்சனத்தை தவிர்த்து) பகவத் இராமானுசரின் திரு அவதார திரு நட்சத்திர தினம் கூட அனுசரிக்கப்படாமலேயே இருந்து வந்தது சற்றே வேதனையான விஷயம்!

உடையவரின் உத்சவத் திருவுருவம் எழுந்தருளப் பண்ணப்படாமல் கருவூலத்திலேயே வைக்கப்பட்டிருந்தது. எனது உறவினர் ஒருவர் முயற்சியின் பேரில், எம்பெருமானாரின் உத்சவ மூர்த்தியை, இவ்வருடம், அவரது அவதார திருநட்சத்திர நாளில் (27 ஏப்ரல் 2012) உள் மண்டபத்தில் எழுந்தருளப் பண்ணவும் சிறிய அளவில் உத்சவம் நடத்தவும் உரிய அனுமதி பெறப்பட்டது.


அதன்படி, ஏப்ரல் 27 அன்று உபதேச (ஆட்காட்டி விரல் மடங்கி கட்டை விரலுடன் ஒரு வட்டம் ஏற்படுமாறு சேர்ந்து, மற்ற மூன்று விரல்களும் மேல் நோக்கியபடி இருக்கும்) முத்திரையுடன் கூடிய ராமானுசரின் அழகிய உத்சவ மூர்த்தி, ஆழ்வார் மண்டபத்தில், உடையவரின் மூலவ மூர்த்திக்கு நேர் எதிரே எழுந்தருளினார். எம்பெருமானாருக்கு திருமஞ்சனம், முறையான நாலாயிர பிரபந்த சேவையும், சாற்றுமுறையும் நடைபெற்றன. பட்டு வஸ்திரமும், மாலைகளும் சாத்திக்கொண்டு எம்பெருமானார் தேஜஸ்வியாக அருள் பாலித்தது கண்கொள்ளா காட்சி!






இரு ஆச்சரியமான விஷயங்களை இதை வாசிப்பவரிடம் பகிர்ந்து கொள்வது அவசியம் என்று நினைக்கிறேன். பெருமாள் கிடந்த கோலத்தில் அருளும் திவ்யதேசங்களில், திருமெய்யரின் மூலவ மூர்த்தியே, நீள அளவில், மற்ற திவ்யதேச மூலவர்களைக் காட்டிலும் பெரியவர்! மற்றொன்று, திருமெய்யத்தில் உபதேச முத்திரையுடன் கூடிய எம்பெருமானாரின் உத்சவ மூர்த்தி, விசேஷமானது, காண்பது அரிது! வைணவ சம்பிரதாயத்தில், உபதேச முத்திரையில் மேல் நோக்கி இருக்கும் மூன்று விரல்களும், சித்தம், அசித்தம் மற்றும் ஈஸ்வர தத்வங்களாகிய தத்வத்ரயத்தையும், திருமந்திரம், த்வயம் மற்றும் சரம ஸ்லோகங்களான ரகஸ்யத்ரயத்தையும் குறிப்பவை. ஆட்காட்டி மற்றும் கட்டை விரலும் சேர்வதால் ஏற்படும் வட்டம், பூர்ண சரணாகதியால் அடையவல்ல பரமபதத்தை குறிப்பதாகும். இப்படி உபதேச முத்திரையுடன் அருள் பாலிக்கும் எம்பெருமானார் திருவுருவம், திவ்யதேசங்களில், திருப்பதி மற்றும் ஸ்ரீரங்கத்தில் மட்டுமே காணப்படுகிறது.

பக்தர்களின் நித்ய தரிசனத்துக்காக, உடையவரின் உத்சவ விக்ரஹம், திருமெய்யரின் சன்னதியில் எழுந்தருளப் பண்ணப்பட்டு இருப்பதாலும், இதற்கு இந்து அறநிலையத்துறையின் அனுமதி கிடைக்கும் என்று நம்புவதாலும், திருமெய்யம் செல்லும் அன்பர்கள் இனி வருடம் முழுதும், பெருமாளோடு, எம்பெருமானாரையும் ஒரு சேர, அகம் மகிழ சேவிக்கலாம்! திருமெய்யத்தில் உடையவர் வழிபாடு மீண்டும் துவக்கப்பட்டதற்கு திருமெய்ய மக்களில் பலர் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.

சாதி பேதமின்றி, ஸ்ரீமன் நாராயணனை சரணடைந்தவர்கள் அனைவரும் வைணவர்கள் என்றதோடு நில்லாமல், திருக்கோட்டியூர் கோயில் கோபுரத்தில் ஏறி நின்று, தனது ஆச்சாரியனான திருக்கோட்டியூர் நம்பியின் கட்டளைக்கு மாறாக, அஷ்டாட்சர மந்திரத்தை அனைவருக்கும் உபதேசித்தவர் அண்ணல் இராமனுசன்! வைணவ சம்பிரதாயத்தை நெறிப்படுத்தி, கோயில் ஒழுக்கை ஏற்படுத்தி, வைணவம் செழித்து தழைக்க இவ்வுலகில் அவதரித்த எம்பெருமானார், வைணவ குரு பரம்பரை என்ற ஆரத்தின் நடுநாயகமாய் திகழும் மாணிக்கம் போன்றவர் என்றால் அது மிகையில்லை. உடையவர் சம்பந்தம் இருந்தால் மட்டுமே, பூரண சரணாகதி நிலையிலும், பெருமாளை பற்ற முடியும் என்பது வைணவ பெருந்தகைகள் வாக்கு. அதனால், திவ்ய தேசங்களில், ராமானுச வழிபாடு என்பது கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டிய ஒன்றாகிறது.

அப்பேர்ப்பட்ட மகான் அவதரித்து ஆயிரம் ஆண்டுகள் 2017-ஆம் வருடம் சித்திரையில் திருவாதிரை நட்சத்திர நாளன்று பூர்த்தியாவது ராமானுச அடியார்களுக்கு ஒரு முக்கிய நிகழ்வாகும். அதை, அவ்வாண்டும் முழுதும் ஒரு பொது நிகழ்வாக, விமரிசையாக, சொற்பொழிவு, வழிபாடு, திராவிட வேதம் என்று போற்றப்படும் நாலாயிர பாராயணம், தரும காரியங்கள் என்று பல இடங்களிலும் கொண்டாட வேண்டும். அதற்குள், வைணவர்கள் அனைவரும், பிரபன்ன காயத்ரி என்று போற்றப்படும் இராமனுச நூற்றந்தாதியை மனனம் பண்ணி, அதை பிறழாமல் பாராயணம் பண்ண கற்றுக் கொள்ளுதல் வேண்டும். அது போலவே, எல்லா வைணவ திவ்ய தேசங்களிலும், அபிமான ஸ்தலங்களிலும், ஏன், எல்லா விஷ்ணு கோயில்களிலும், உடையவரின் உத்சவ மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்படு, நித்ய கைங்கர்யத்துடனான ராமானுச வழிபாடு பரவலாக நடைபெற வேண்டும் என்பது பலரின் அவாவாக உள்ளது!

மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து * எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா * உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே *
நண்ணரு ஞானம் தலைக்கொண்டு * நாரணற்காயினரே

(இராமானுச நூற்றந்தாதி 41)

இராமானுச முனியின் சீரும் சிறப்பையும் புரிந்து கொள்ள கூரத்தாழ்வானின் சீடரான திருவரங்கத்து அமுதனார் அருளிய இப்பாசுரமே போதும்! அதாவது, "பரமபத நாயகனே நேரில் வந்து காட்சி அளித்தாலும், அஞ்ஞான இருளில் அதை உணர இயலாத நிலையில் இருந்த உலக மாந்தரெல்லாம், ராமானுஜர் அவதரித்த அக்கணமே, நல்ஞானம் பெற்று, நாராயணனுக்கு உற்றவர் ஆயினர்" என்பது இப்பாசுரத்தின் உரையாம்!

உயர்ந்து மலர்ந்த திருமுடி அழகும், உறைந்து தழைந்த திருக்கேசமும், நயந்து சுற்றிய நல்ல குழலிணை நன்றாய்ச் சுற்றிய சிகாபந்தமும், பின்னெடுத்ததோர் பிடரியின் அழகும், பிரிந்து கூடிய முக்கோல் அழகும், கண்ணொடு பிரியும் அரவப்படமாய் கண்களை மயக்கும் அழகிய முதுகும், காணக்காணத் திகட்டிடாது கவினாய்த் தோன்றும் இராமாநுஜனே!

தேனாம் உன்னடிச் சரணம் அடைந்தோம் தினமும் எம்மைக் காத்தருள் என்றே.. காத்தருள் என்றே!

எ.அ.பாலா

Wednesday, January 20, 2010

554. "சிக்க" திருப்பதி !

பொங்கல் விடுமுறையில் குடும்ப சகிதம் பங்களூரு சென்றிருந்தேன். வெண்களத்துக்கு (அதாங்க ஒயிட்ஃபீல்டு) அருகில் ஒரு ஹோட்டலில் வாசம். மூத்தவள் ரொம்ப நாளாகப் போக வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்த விஸ்வேஸ்வரா மியூசியத்திற்கு விஜயம். நான் பல வருடங்களுக்கு முன் அங்கு சென்றதாக ஞாபகம். கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களுள் ஒன்று.
இடுகையில் உள்ள படங்களை கிளிக்கி பெரிதாக்கிப் பார்க்கவும்.
பல அறிவியல் விதிகளை விளக்கும் காட்சிகள்/மாடல்கள், புராதனப் பொருட்கள், அறிவியல் உபகரணங்கள், அந்தக்காலத்து நீராவி எஞ்சின், ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானத்தின் மாடல் என்று பல விஷயங்களை பார்க்க முடிந்தது.

ஜுராசிக் பார்க் படத்தில் பார்த்ததைப் போன்ற (சற்று அளவில் சிறிய) டைனோசர் ஒன்று நிமிடத்திற்கு ஒரு முறை தலையையும் வாலையும் ஆட்டி "எனக்கு சாப்பாடு போடுவியா மாட்டியா?" என்ற வகையில் ஒரு அறையில் உறுமிக் கொண்டிருந்தது!
சரி, இடுகையின் தலைப்பு மேட்டருக்கு வருவோம்! நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு கொஞ்ச தூரத்தில் சிக்க திருப்பதி என்ற கோயில் இருப்பதாக கேள்விப்பட்டு, பெருமாளை பார்க்காமல் போனால் அவர் கோச்சுப்பாரே என்ற எண்ணத்தில், அங்கு செல்ல முடிவெடுத்தேன். Hope Farm என்ற நிறுத்தத்திலிருந்து சிக்க திருப்பதிக்கு பஸ் போவதாக ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட் ஹேளியருளினாள். நடக்கும் தூரம் தான் என்றும் கூறினாள்.

பெருமாள் சோதிக்க ஆரம்பித்தார். ஹோப் ஃபார்ம் எந்தப்பக்கம் என்று நான் விசாரித்த யாருக்கும் தெரியவில்லை! சற்று ஆங்கிலப் பரிச்சயம் உடைய புண்ணியவான் ஒருவர், 'ஹோப் ஃபார்ம் என்று கேட்கக்கூடாது, ஓ-ஃபார்ம் என்று கேட்டால் தான் இங்கு புரியும்' என்று என் தத்துவ விசாரத்துக்கு மாபெரும் முற்றுப்புள்ளி வைத்தார்! 'சே, ஹோப் ஃபார்ம் என்பதற்கு கன்னடத்தில் ஓ-ஃபார்ம் என்று கூட அறியாத ஜடமாக இருக்கிறோமே' என்று ஆற்றாமையாக இருந்தது!

ஓ-ஃபார்ம் பஸ் நிறுத்தத்தில் கலர்ச்சட்டை அணிந்த நபர் ஒருவரிடம், சிக்க திருப்பதி பஸ் பற்றி விசாரித்ததில், வழக்கமாக வரும் பஸ் அன்று லேட் என்று கூறினார். நம்பர் இல்லாத பஸ் ஒன்று வர, கலர்ச்சட்டைக்காரர் 'பன்னி பன்னி' (பன்னி என்றால் கன்னடத்தில் வாங்க என்பதை அறிந்ததால் அவர் என்னைத் திட்டவில்லை என்று திடமாக புரிந்தது!) என்று தானும் பஸ்ஸில் ஏறிக் கொண்டு, 'எத்தனை டிக்கட்?' என்றார்! அவர் தான் நடத்துனர் என்பது உரைத்தது. பஸ் நிறுத்தத்தில் பயணிகளோடு பஸ்சில் ஏறும் நடத்துனரைப் பார்க்க அதிசயமாக இருந்தது.

பணத்தைப் பெற்றுக் கொண்டு, பில் புத்தகம் மாதிரி இருந்த நோட்டிலிருந்த ஒரு மஞ்சள் கலர் சாணிப் பேப்பரில் தொகையை எழுதி, கிழித்து என்னிடம் கொடுத்தார். இந்தியாவின் சிலிக்கன் வேலிக்கு (Valley) அருகில் உள்ள ஒரு இடத்தில் டிக்கட் கொடுக்கும் அழகைப் பாருங்கள்! "சிக்க திருப்பதி போக இந்த டிக்கட் போதுமில்லையா?" என்று வினவியதற்கு, 'இதை வைத்துக் கொண்டு நேரா வைகுண்டம் வரை போகலாம்' என்பது போல ஒரு புன்னகையை அருளி என்னை ஆசுவாசப்படுத்தினர்! பஸ்சில் கூட்டம் அவ்வளவாக இல்லை. சாலையும் அத்தனை மோசமில்லை. சாலையோரப் பசுமை, சில்லெனக் காற்று என்று 25 கிமீ பயணம் மனதுக்கு ரம்யமாகவே அமைந்தது.
சிக்க திருப்பதி போய் சேர்ந்தோம். பெயருக்கு ஏற்றாற்போல, அழகான, "சிக்க" கோபுர தரிசனம்! கோயிலில் கூட்டமும் "சிக்க" தான்! அர்ச்சனை தட்டு வாங்கிய கடையில் இருந்த பெண்மணி, 2 தேங்காய்கள் வாங்கிச் செல்ல வேண்டும் என்றார். ஏன் என்றதற்கு, 'பெருமாளுக்கு ஒன்று, லஷ்மிக்கு ஒன்று' என்று கூறி ஒரு பேருண்மையை எனக்குப் புலப்படுத்தினார். சரி, இவ்வளவு தூரம் வந்தாயிற்று, புண்ணியத்தின் முழுப்பலனை ஒரு 10ரூ தேங்காயினால் தவற விடக்கூடாது என்று 2 தேங்காய்களை வாங்கினேன்.
கோயில் உள்ளே நுழைந்தவுடன், ஒரிஜினல் திருப்பதி போலவே, சிக்க திருப்பதியையும் வடகலையார்கள் டேக் ஓவர் பண்ணியிருப்பது விளங்கியது :-) கோயிலில் அர்ச்சனை டிக்கட் வாங்கிக் கொண்டு, மூலஸ்தானத்திற்குள் செல்ல வழி கேட்டபோது, கோயில் ஆசாமி, ஒரு பெரிய கல் மேடையைக் காட்டி, 'தேங்காய்களை நீங்களே உடைத்து அர்ச்சனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்' என்றார். 'நாங்களே தேங்காயை உடைக்க வேண்டுமென்றால், அர்ச்சனை டிக்கட் எதற்கு?' என்று கேட்க நினைத்தேன். என் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட என் மனைவி, "கோயிலில் எதையாவது ஆரம்பிக்காதீர்கள்! வீட்டில் தான் கையசைப்பதில்லை, போய் தேங்காய்களை உடைத்துக் கொண்டு வாருங்கள்" என்று உத்தரவு பிறப்பித்தார். கோயில் ஆசாமி சிரித்தது போலத் தோன்றியது என் பிரமையாகவும் இருக்கக் கூடும்! 2 தேங்காய்கள் 4 ஹெமிஸ்பியர்கள் ஆயின! பெருமாள் சன்னதிக்குள் நுழைந்தோம்.
"எம்பிரான் எந்தை என்னுடை சுற்றம் எனக்கரசு என்னுடை வாணாள்" என்று திருமங்கையாழ்வாரை மனமுருக, பக்திப் பரவசத்துடன் பாட வைத்த எம்பெருமான் "சிக்க" திருவேங்கடமுடையானின் (ஸ்ரீதேவி பூதேவி நாச்சியாருடன்) "தொட்ட" திவ்ய தரிசனம் கிட்டியது! கண் குளிர சேவித்தோம். திருமலைப் பெருமாளின் மினியேச்சராக இருந்தார், சிக்க திருப்பதி நாயகன்! "ஜருகண்டி" என்று யாரும் பிடித்துத் தள்ளாததால், ஒரு 7-8 ஆழ்வார் பாசுரங்களை நிதானமாக சொல்ல முடிந்தது.

குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே!

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே!

ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே!

ஹோட்டலுக்கு மீள்பயணம் மேற்கொள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்தோம். கூட்டமாக ஒரு பஸ் வந்தது. கண்டக்டர் கீழே இறங்கி, '2 மணி நேரத்திற்குப் பின் தான் அடுத்த ஒயிட்ஃபீல்ட் பஸ்' என்று காப்ரா பண்ணியவுடன், என் மனைவி மகள்களைக் கூட்டிக் கொண்டு சட்டென்று பஸ்சில் ஏறி விட்டார்! அம்போவென்று நின்றிருந்த என்னையும் பஸ்சுக்குள் திணித்து, கண்டக்டர் பின்னால் ஏறிக் கொண்டார்!

நல்ல வேளை, 2 நிறுத்தங்களுக்குப் பின், எனக்கும், என் மகள்களுக்கும் உட்கார இடம் கிடைத்து விட்டது. மனைவிக்குக் கிடைக்கவில்லை! சிக்க திருப்பதி பெருமாள் சங்கல்பம் அப்படி இருந்தால் நான் என்ன செய்ய முடியும் :-) பக்கத்தில் இருந்த கிராமத்து ஆசாமியிடம் "ஓஃபார்ம் ஸ்டாப்பிங்க் சொல்ப ஹேள்பிடி" என்று கூறி என் கூரிய கன்னட அறிவை பிரகடனப்படுத்திக் கொண்டேன்! இப்பயணத்தில் வெள்ளந்தியான, உதவும் குணம் கொண்ட கிராமத்து மனிதர்கள் பலரைக் கண்டதும் மனதுக்கு இதமாக இருந்தது.

அது வரை, தன் கன்னட மொழியறிவை பயன்படுத்தாத (நன்றாக கன்னடம் பேசக்கூடிய) என் மனைவி, கண்டக்டருடன் அளவளாவி, பஸ் எங்களை ஹோட்டல் வாசலிலேயே இறக்கி விடும்படி ஒரு ஏற்பாடு செய்து விட்டார்! இப்படியாக சிக்க திருப்பதி பயணம் இனிதே நிறைவடைந்தது!

எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails